அப்பாவும் நானும் அப்போது தான் எங்கள் கிராமத்தில் இருந்து திரும்பி இருந்தோம். டவுண் பஸ் நிலையத்தில், ஊரிலிருந்து வந்த பஸ் விட்டு இறங்கி, எங்கள் வீட்டுக்குப் போகும் 3அ பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தோம். பேருந்து நிலையத்தில் பார்த்ததை எல்லாம் வாங்கித் தரச் சொல்லி கேட்டுக் கொண்டு இருந்தேன். அடுக்கப்பட்ட உப்பின பூரிகளைப் பார்த்தவுடனே எனக்கு எச்சில் ஊற ஆரம்பித்திருந்தது. எனக்கு அப்போது பூரி பொறிக்கும் எண்ணை பற்றியெல்லாம் யோசிக்கத் தெரியாத 10 வயது. அப்பா பொறுமையாக, “அதெல்லாம் வேண்டாம், நம்ம ஊரில இருந்து கொய்யாக்காய் கொண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போய் அத சாப்பிடலாம்’ என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். எங்கள் செவக்காட்டுக் கொய்யாக்காய், மாம்பழம் மற்றும் பலாப்பழங்கள் தான் எங்களுக்குக் கொடுக்கப்படும் சிற்றுணவு. கொய்யா என்றால் சிவப்புக் கொய்யா. மிகவும் இனிப்பாக இருக்கும்.
நாங்கள் என்றால், நான், என் அக்கா இருவர், பெரிய சித்தப்பாவின் பிள்ளைகள், சின்ன சித்தப்பாவின் பிள்ளைகள், விடுமுறை தோறும் வரும் பெரிய அத்தையின் பிள்ளைகள், சின்ன அத்தையின் பிள்ளைகளுமாக மொத்தம் 14 பிள்ளைகளும் தான். என் அப்பா ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் கணக்கு ஆசிரியர். என் அம்மா ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர். இனப்பெருக்கமே வெற்றியின் களிப்பாககக் கருதப்பட்ட காலத்தில் இவர்களின் அரசு ஊதியத்தில் ஏழ்மையில் இருந்து கையூன்றி எழும்பிக் கொண்டிக்கும் ஒரு பெரிய குடும்பம். அவர்கள் கண்காணிப்பில் நானும் என் சித்தப்பா பிள்ளைகளுமாக 8 பேர் எங்கள் கிராமத்திலிருந்து 20கிமீ தொலைவில் இருந்த பள்ளிகளில் (அவரவர் வயதுக்கு ஏற்ப) படித்துக் கொண்டிருந்தோம். அத்தையின் பிள்ளைகள் அவரவர் வீடுகளில் இருந்து படித்துக் கொண்டிருந்தனர். விடுமுறை தோறும் நாங்கள் அனைவரும், எங்கள் கிராமத்திற்குச் சென்று, திண்ணையில் அமர்ந்து பல்லாங்குழியும் தாயமும் விளையாடி, அங்கேயே உண்டு, உறங்கி, பம்ப் செட்டில் நீராடி, வெட்ட வெளியில் வெளிக்கிப் போய், சண்டையிட்டு, அதிகாரம் பண்ணி என எல்லா அட்டகாசமும் செய்வோம்.
காணாதக் குறைக்கு கடைசி மூன்று சித்தப்பாக்களும் வயதில் சிறியவர்கள். அவர்களும் இந்த அட்டகாசத்தில் சேர்த்தி. அதில் முருகன் சித்தப்பா எங்கள் அனைவருக்கும் செல்லம்- எங்களோடு சண்டையிடவே மாட்டார். அப்போது அவர் ஒரு பட்டதாரியாக வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். கடா மாடு போல சதா முறுக்கிக் கொண்டும் சுற்றும் ஆண்கள் சூழ்ந்த எங்கள் உலகில், முருகன் சித்தப்பா மிகவும் மென்மையானவர். ஒரு முறை கூட எங்களில் யாரையும் அடித்தது கிடையாது. அதிர்ந்து கூட பேசியது கிடையாது. அதனால் இயல்பாகவே அவரென்றால் பிள்ளைகள் அனைவருக்கும் மிகவும் பிரியம். எதையும் இரண்டு முறை பேசுவார். “செவக்காடுக்குப் போய்ட்டு வாரேன்” என்று சொல்லுமிடத்தில், “செவக்காடுக்குப் போய்ட்டு வாரேன், செவக்காடுக்குப் போய்ட்டு வாரேன்” என்று இருமுறை வேகமாகச் சொல்லுவார். கவனமாகக் கேட்டால் புரியும், இல்லையென்றால் அவரை மீண்டும் சொல்லச் சொல்லி புரிந்து கொள்வோம். எங்களிடம் மட்டும் தானா என்றால்- இல்லை, எல்லாரிடமும் அப்படித் தான். அக்கா அண்ணன்களின் பள்ளி முன்பே திறந்து விட்டிருந்ததால், அவர்கள் எல்லாம் முன்னமே திரும்பி விட்டிருந்தனர். என்னுடைய பள்ளி மறுநாள் துவங்குவதால், நான் அப்பாவுடன் திரும்பிக் கொண்டிருந்தேன்.
பேருந்து நிலையத்தில் பூரி கிடைக்காத ஏமாற்றத்தில் மூஞ்சைத் தூக்கிக் கொண்டு அப்பாவிற்குப் பின்பாகச் சென்று என் கோபத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் எங்கள் ஊர் மாரி அண்ணன் வண்டியில் வந்து அப்பாவைக் கண்டுப்பிடித்து, ‘உங்கள எங்க எல்லாம் தேடறது சித்தப்பா, நல்ல வேள நீங்க வீட்டுக்குப் போகல. முன்னாடியே கண்டுப்பிடிச்சிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டே வண்டியை நிறுத்தினார். அப்பா மாரியண்ணனைப் பார்த்த மகிழ்வு ஒருபுறமும், அவர் வந்த சேதி தெரியாத பதற்றம் ஒருபுறமுமாக, ‘என்ன மாரி, இப்போ தான ஊர்ல இருந்து வந்தேன், அதுக்குள்ளே தேடிட்டு வந்தருக்க? அப்பா நல்ல இருகாகல்ல?’ என்றுக் கேட்டார்கள். மாரி அண்ணன், “அதெல்லாம் நல்லா தான் இருக்காக, இங்க சங்கதியே வேற’ என்று சொல்லி, அப்பா அருகில் சென்று, அப்பாவிடம் ரகசியமாய் ஏதோ சொன்னார். கேட்டவுடனே அப்பாவோட முகம் வெளிறி விட்டது. சிறிது நேரம் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, ‘இரு, இவள கொண்டுப் போய் வீட்ல விட்டுட்டு நானும் உன்கூடயே வாரேன்’ என்று சொன்னார்கள்.
நான் பைக் டாங்க் மேல உக்கார, மாரியண்ணன் வண்டியை ஓட்ட, மூன்று பேரும் வீட்டுக்குச் சென்றோம். வழியெல்லாம் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. என்னை வீட்டில் விட்டுவிட்டு, ஒரு கிளாஸ் காபி குடித்துவிட்டு, ரெண்டு பேரும் வேகமாக கிளம்பி, மாரி அண்ணனோடு அவருடைய வண்டியிலேயே போய் விட்டார்கள். அம்மாவும், சித்தியும் விபரம் தெரிந்து அதிர்ச்சி ஆனார்கள். ‘கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம், இப்டியா அவசரப் படறது?’ என்று சித்திப் புலம்பினார்கள். அம்மா அவர்களிடம், ‘ஏன் ராணி, இதுனால முருகனுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?’ என்று கேட்டார்கள். சித்தி, ‘அவ எதுவும் letter எழுதீருக்காளானு தெரில, அப்டியே எழுதீருந்தாலும் இவன் என்ன செஞ்சான்? இதுல இருந்து அவன் எப்டி மீளப் போறான்னு தான் தெரில’ என்று சொன்னார்கள். பெரியவர்கள் பேசிய எதுவும் எனக்குப் புரியவில்லை. வீட்டில் இருந்த பெரிய அக்காக்களுக்குப் புரிந்திருக்கும் போல. ஆனால், அவர்களிடம் எவ்வளவு கேட்டும் எனக்குச் சொல்ல மறுத்துவிட்டார்கள்.
இரண்டு நாட்கள் கழித்துத் தான் அப்பா திரும்பினார்கள். இரவில் நான் தூங்கிவிட்டேன் என நினைத்து, அப்பா அம்மாவிடம், ‘அந்த மேல வீட்டுக்காரன் என்னிக்கி நம்மள வாழ விட்டான், இன்னிக்கி விடறதுக்கு? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, அந்த சின்ன பிள்ளைய மெரட்டி அவள இப்டி சாகடிச்சிடானே!’ என்று புலம்பினார்கள். அம்மா உச்சுக் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ‘முருகனைப் பாக்கவே முடில மலரு, அவள நடு வீட்ல எறக்கி வெச்சிருக்காங்க, மேல விழுந்து அழுறான். அவன மல்லுக்கட்டிக் கூட்டிட்டு வாரதுக்கு எனக்கே பலம் இல்ல. நானும் கருப்பனும் சேர்ந்து இழுத்துட்டு வந்தோம் கடசீல’. பேசிக் கொண்டே இருந்தார்கள். யாரைப் பற்றிப் பேசுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்றும், அதனால் முருகன் சித்தப்பா ரொம்ப அழுகிறார்கள் என மட்டும் புரிந்தது.
ஒரு வாரம் கழித்து வந்த முருகன் சித்தப்பாவைப் பார்த்தவுடனே ஓடிப்போய் அவர்கள் காலைக் கட்டிப் பிடித்தேன். சித்தப்பா என்னை முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, அப்படியே மச்சி ஏறிப் போய் விட்டார்கள். யார்கூடவும் பேசவில்லை. சாப்பிடக் கூட இறங்கி வரவில்லை. அம்மாவும் சித்தியும் மாறி மாறி சோறுக் கொடுத்துவிட்டு வந்தார்கள்.
ஒரு நாள் சாயங்காலம் அப்பா, பெரிய தாத்தாவிடம், ‘இவன இப்டியே விட்டா, ஒண்ணும் இல்லாம போயிருவான், பேசாம நம்ம வினயாரம் பொய்லான் ட்ட சொல்லி இவன சிங்கப்பூருக்குக் கூட்டிட்டுப் போக சொல்லிக் கேப்போமா?’ என்றுக் கேட்டார்கள். தாத்தா, ‘அன்னைக்கு என்னைய வெட்னான், இன்னிக்கி இவன் வாழ்க்கைய இப்டி அறுத்துட்டானே, பாவிப்பய’ என்று புலம்பிவிட்டு, ‘அவன சிங்கப்பூருக்கு அனுப்பீட்டா, அவன் அங்க என்ன செயுதான்னே தெரியாது பரமா, அவன ஒருத்தன மட்டும் தனியா விட்டுட்டு, நம்ம எல்லாரும் இங்கிட்டு சந்தோசமா இருக்க முடியுமா ல?’ என்று கேட்டார்கள். அப்பாவிற்கு அழுகை முட்டியது, ‘பொய்லான் கிட்ட கேட்டுத் தான் பாப்போமே’ னு சொல்லி அதற்குமேல் பேச விருப்பமில்லாமல் அங்கிருந்துக் கிளம்பி விட்டார்கள். அது போன் வசதிக்கு முந்தையக் காலம் ஆகையால், பொய்லான் மாமா ஊருக்கு வருவதற்குக் காத்துக் கொண்டு இருந்தார்கள்.
பொய்லான் மாமா அடுத்த லீவுக்கு ஊருக்கு வந்தப் போது, அவரை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து, முருகன் சித்தப்பாவைப் பற்றிப் பேசினார்கள. அவரோட கம்பனியிலேயே சித்தப்பாவுக்கு வேலை வாங்கித் தருவதாக பொய்லான் மாமா சொன்னார். அதனால், அவர்கூடவே சித்தப்பாவை அனுப்பி விடுவதாய் முடிவு செய்தார்கள். முருகன் சித்தப்பா சிங்கப்பூர் செல்வதற்கான எல்லா ஆயத்தங்களும் நடந்தன. பெரிய அத்தை வடகமும் கூழ் வத்தலும் செய்து கொண்டு வந்தார், சின்ன அத்தை சம்படம் நிறைய கொத்தவரங்கா வத்தல் கொண்டு வந்தார். அம்மாவும், சித்தியும் சித்தப்பாவிற்கு முறுக்கு செய்து பெரிய பாலிதீன் பைகளில் அடுக்கி கட்டினர். ஒரு இனிய நாளில், சித்தப்பா கிளம்பியே விட்டார். ரொம்ப நாட்களாக முருகன் சித்தப்பா யாருடனும் பேசாமலே இருந்ததால், அவர்கள் ஊருக்குப் போனது எங்களுக்குப் பெரிய இழப்பாகத் தெரியவில்லை.
மாதா மாதம் சித்தப்பாவிடம் இருந்து ஒரு கடிதம் வரும். அந்த கடிதம் வரும் அன்று எல்லாரும் அதனைத் தனியாக ஒரு முறையும், கூட்டாகப் பல முறையும் படித்து விடுவோம். கடிதத்தைப் பாட்டிக்கு வாசிப்போம். பாட்டி எதையும் கவனிப்பார்களா எனத் தெரியாது, அடிக்கடி ‘அவன் சொகமா இருக்கானா, எப்போ வாரான்’ என்று மட்டும் கேட்பார்கள். தாத்தாவிற்குக் கடிதம் எழுதத் தெரியாது, ஆகையால், அவர்கள் சொல்ல சொல்ல பிள்ளைகளுள் யாரோ ஒருவர் தான் எழுதுவோம். கடிதம் முழுக்கவே வீட்டில் நடந்தவைகளின் விவரிப்பு தான். ‘வெள்ளப்பசு கண்ணு போட்டிருக்குப்பா, அச்சு அசல் தாய் மாரியே!’ வும், ‘நம்ம சின்னவன் படிச்சி முடிச்சிட்டான். அவனுக்கும் அங்கன ஏதாவது வேல கெடைக்குமா? உனக்குத் துணைக்குக் கூப்பிட்டுட்டுப் போறியா?’ வும் ‘நம்ம சாமி மகன் இருக்கன்ல? அதாம்ல நம்ம வெங்கி, அவன் பள்ளியூடம் மாறிட்டான். பழய பள்ளியூடத்துல என்னமோ பிரச்சனையாம். பரமா தான் அங்கயும் இங்கயும் பேசி புதுப் பள்ளியூடத்துல எடம் வாங்கிக் குடுத்தான். எங்க, இந்தக் காலத்துல பிள்ளைக எல்லாம் உங்கள மாரியா கருத்தா இருக்குதுக?’ எனச் சில புலம்பல்களும் அடங்கும்.
இரண்டு வருடங்கள் கழித்து சித்தப்பா வீட்டுக்கு வந்தார்கள். அப்போது விமான போக்குவரத்து இவ்வளவு அடர்த்தியாக இல்லாததால் அவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் இறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு 1 வாரம் முன்பே, அவர்களைத் திருவனந்தபுரத்தில் இருந்து எப்படி அழைத்து வருவது என்பது பற்றி, அப்பா, பெரிய தாத்தா, மாமா தாத்தா மூவரும் பேசிக்கொண்டார்கள். அப்பாவும், மாமா தாத்தாவும் ப்ளசர் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டுப் போய் கூட்டிக் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. நாங்கள் பிள்ளைகள் அனைவரும், ‘முருகன் சித்தப்பா வர்றாக, முருகன் சித்தப்பா வர்றாக’ னு குதியாளம் போட்டுக் கொண்டு இருந்தோம்.
எங்களுக்கு அப்போது ஏரோபிளேனில் பறப்பதும், ஏரோட்ராமும் மிக அதிசயமான அப்பாற்பட்ட உலகமாய் விளங்கியது. ராத்திரியெல்லாம் தூங்காமல், சிங்கப்பூர் பற்றியும், ஏரோபிளேனில் பறப்பதுப் பற்றியும், ஏரோட்ராம் பற்றியும் பேசிக் கொண்டே இருந்தோம். நாங்கள் இருந்த தெரு குறுகலானது, அதனால் அதற்குள் ப்ளஸர் கார் வர இயலாது, ஆகையால், தெருமுக்கில் ப்ளஸரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து வர வேண்டும். சிறுவர்கள் நாங்கள் அங்குமிங்கும் ஓடுவதும், நடப்பதுமா இருப்பதைப் பார்த்த பெரிய அத்தை, “பிள்ளைகளா! எதுக்கு வாசலுக்கும் தெருமொனைக்கும் போய்ட்டு போய்ட்டு வாரீக? ப்ளஸர் வருதா வருதா னு பாத்துட்டே இருந்தா வந்திருமா?” எனக் கிண்டலடித்தார். நாங்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
இறுதியாக ப்ளஸர் வந்தவுடன், எல்லா பொடுசுகளும் ஓடிப்போய் சித்தப்பாவை ஆர்வமுடன் ஏற இறங்க பாத்தோம். சித்தப்பா இப்போது சிரித்த முகமாக இருந்தார்கள். நாங்கள் ஆளுக்கொரு பையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஊர்வலம் போகிற மாதிரி போனோம். சித்தப்பா ஒரு மாத லீவில் வந்திருந்தார்கள். அந்த ஒரு மாதமும் வீட்டில் ஒரே விழாக் கோலம் தான். கச கச வென்று வீட்டுக்கு தினமும் யாராவது வந்துக்கொண்டே இருந்தார்கள். ஊரணி பாட்டியும், தாத்தாவும் அந்த மாதம் முழுக்க இங்கேயே தங்கி விட்டார்கள். முருகன் சித்தப்பாவிடம் யாராவது கல்யாணத்தைப் பற்றிப் பேசினால், சித்தப்பா பதில் சொல்லாமல் மழுப்பினார்கள் அல்லது பேச்சை மடைமாற்றினார்கள். அவர்களைப் பார்க்க வந்த தூரத்து சொந்தத்தில் ஒரு அத்தை, ‘இப்போ என்ன கல்யாணமா பண்ணிட்ட முருகா, அவள நெனச்சிட்டே இருக்கறதுக்கு? கல்யாணம் முடிச்சு 2 பிள்ளைய பெத்தவங்களே பொண்டாட்டி செத்து ஒரு வருசத்துல மறு கல்யாணம் பண்ணிகிடுதாங்க. நீ ஏம்ல இப்டியே இருக்கிற?’ என்றுக் கேட்டார்கள். அதற்கும் அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
லீவ் முடிந்து சித்தப்பா கிளம்பும்போது, எல்லாரும் அழுதோம். யாருமே யாரையும் அமைதிப் படுத்தவில்லை. சின்னதோ, பெரியதோ எப்பேர்பட்ட பிரிவுனாலும், பிரிவுங்கறது பெரிய வேதனைத் தான் போலும். நண்டு சிண்டெல்லாம் அழுதது. அவர்கள் கிளம்பும்போதும் வாடகைப் ப்ளசரில் தான் போனார்கள். அப்போதும் நாங்கள் தெருமுக்கில் போய் தான் ஏற்றி விட்டோம். எல்லாரும் அழுதுக் கொண்டே திருப்பி வந்தோம். சித்தப்பா ப்ளசரில் ஏறும்போது ரொம்ப அழுதார்கள். அந்த அழுகை கண்ணுக்குள்ளே இருந்தது. நம்ம கூடவே இவ்வளவு பேர் இருக்கும்போது, அந்த அழுகை கண்ணுக்குள்ளே இருக்குதே, எல்லாரையும் விட்டுவிட்டு தனியாகப் போகும்போது என்ன என்ன நினைப்பு இருந்திருக்கும், யாரைப் பற்றியெல்லாம் யோசித்திருப்பார்கள்? என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.
மீண்டும், எங்களுக்குள் தொடர்பு மாதம் ஒரு முறை வரும் கடிதத்தில் தான் நடந்தது. ஆனால், கூடுதலாக எங்கள் வீட்டுக்கு ஒரு தொலைப்பேசி வந்தது. பச்சை நிறத்தில், ஓட்டைக்குள் இருக்கும் எண்களைச் சுழற்றி கூப்பிடும் தொலைப்பேசி. ஆனால் எங்கள் ஊருக்குள் மட்டும் நேரடியாகக் கூப்பிட்டுக் கொள்ளலாம். பக்கத்து ஊருக்குக் கூப்பிடணும் என்றால் கூட, தொலை தொடர்பு பரிமாற்று மையத்துக்குக் கூப்பிட்டு, அங்கிருந்து தொடர்புப் படுத்த சொல்ல வேண்டும். அதற்கான தொகை ரொம்ப அதிகம். சித்தப்பா இருக்கிற சிங்கப்பூருக்குக் கூப்பிட வேண்டும் என்றால் தொகை ரொம்ப ரொம்ப அதிகம். ரொம்ப அவசியமாக இருந்தால் தவிர, அவர்களுக்குக் கூப்பிட மாட்டோம். சித்தப்பா என்றாவது ஒரு நாள் கூப்பிடுவார்கள்.
அவர்களுக்கு மிகவும் பிடித்த சாந்தி அத்தை கல்யாணத்திற்கு வரமுடியவில்லை என அவர்கள் நிச்சயமாக ரொம்பக் கவலைப் பட்டிருப்பார்கள். கல்யாணத்தோடு அவர்களுக்கு எல்லார் சந்தோசத்தையும் கேக்கணும் போல இருந்திருக்கும் போலும். நாங்கள் கல்யாணத்துக்கு முந்தின நாள் பள்ளிக்கு லீவ் லெட்டர் எழுதும்போது தாத்தாவின் குரல் மிக மிக அதிக டெசிபெல்லில் கேட்டது. தொலைபேசியில் பேசுகிற ஆளின் தொலைவுக்கு ஏற்ப எங்கள் பெரிய தாத்தாவின் சத்தம் மாறுபடும், அதைவைத்து அவர்கள் முருகன் சித்தப்பவோடு தான் பேசுகிறார்கள் எனக் கண்டுபிடித்தோம்.
முருகன் சித்தப்பாவிற்கு சற்றுமுன் பிறந்த குரு சித்தப்பா, “இந்த வெளிநாட்டுல வாழ்றது ரொம்ப கஷ்டம் தான் போல? பழகின ஊரு, நமக்கு ரொம்ப பழக்கமான குரலுக, பழக்கப்பட்ட ருசிக, நமக்குன்னு சண்ட போடுற நம்ம உறவுகள், நம்மளோட நிறை குறைகளை நல்ல தெரிஞ்ச கொஞ்சப்பேரு, இவ்வளவு ஏன் நெனச்சாக் கூட ஒருத்தர உரிமையா தொட – இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு, நமக்கு ரொம்ப பிடிச்சவங்களோட பயத்துக்குக் கூட ஆறுதல் தர முடியாம, நிராதரவா இருக்க வேண்டிய கட்டாயம். ரொம்ப கஷ்டம்,” என யாரிடமோ சொல்லிக் கொண்டார். கொஞ்சம் யோசித்துவிட்டு, “அவன் நெனச்சிருந்த ரெண்டாவது தடவ போகாமலே இருந்திருக்கலாம். ஆனா லீவுக்கு வந்தப்போவும் பழைய நினைவுகள் அலைகழிச்சிருக்கும்னு நினைக்கேன். அவனா எதுக்குமே பொறுபேக்க வேண்டிய அவசியமில்லாத, அலைகழிக்கும் நினைவு,” எனப் புலம்பினார்.
அவருடைய புலம்பலை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் – நம்ம மனசுக்குள்ள நம்ம சஞ்சரிக்கிற உலகம் நம்மள சுத்தி இருக்கிற மிக நெருக்கமான உறவுக்குக் கூட வெளிநாடு மாதிரி தானே இருக்கும்? நம் மனது தான் எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது – தொடு வானம் போல, மிக அருகில் ஆனால் எட்டாத தூரத்தில்! கல்யாணம் முடிந்த சாந்தி அத்தைக்குத் தம்பி பாப்பா பிறந்து 1.5 வருஷம் கழித்து தான் சித்தப்பா மீண்டும் வந்தார்கள். இந்த முறை சித்தப்பாவின் முகம் இன்னும் தெளிவாக இருந்தது. நிறைய சாக்லேட்டும் ஒரு வீடியோ deck உம் அதில் பார்ப்பதற்கு நிறைய காசெட்டும் வாங்கி வந்திருந்தார்கள். அபூர்வ சகோதரர்கள் படத்தை, சித்தப்பாவை பார்க்க வந்த எல்லோருக்கும் போட்டு காண்பித்து, நாங்களும் கூடவே பார்த்தோம். நிச்சயம் 50 முறையாவதுப் பார்த்திருப்போம்.
அந்த படம் பார்த்து அலுப்படைந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை அம்மா, அப்பா, தாத்தா, அத்தை, மாமா தாத்தா எல்லாரும் சித்தப்பாவை கூட்டிக் கொண்டுப் பொண்ணு பார்க்க போனார்கள். மத்தியானம் 1.30 மணிக்கு, தொலைக்காட்சியில், தேசிய விருது வாங்கின படங்களின் பட்டியலில் சுவாதி முத்தியம் தெலுங்கு படம் போட்டிருந்தார்கள். மொத்த வீடும் நடு அறையில் உட்கார்ந்து பார்த்தோம். அன்று படம் பார்க்கும்போது காரணமே இல்லாமல், சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி இருந்தது – மழை வருகிற நாளில் ஒரு புத்துணர்வு மகிழ்ச்சி வருமே, அது மாதிரி.
படம் முடிகிற தருவாயில் பொண்ணு பார்க்கப் போன எல்லாரும் திரும்பி வந்தார்கள். சித்தப்பா முகத்தில், எனக்கு விவரம் தெரிந்தப் பிறகுப் பாத்திராத ஒரு உற்சாகத்தையும், நிறைவான மகிழ்ச்சியையும் பார்த்தேன். எங்கள் நடுவில உட்கார்ந்து, “இதான் பிள்ளைகளா, உங்க சித்தி’ என்று அறிவித்தார்கள். சித்தி காட்டன் சேலை கட்டி, ஏதோ ஒரு பார்க் ல எடுத்த புகைப்படம். அமைதியான, நேர்த்தியான, ஒப்பனையில்லாத முழுமையான அழகு. நாம் ஒரு புத்துணர்வு மகிழ்ச்சியோட இருக்கும்போது அப்படியான ஒரு அமைதியைக் காரணமே இல்லாம பிடித்துவிடும் – அதுக்குப் பிறகு அந்த அமைதியே இல்லாமல் இருந்தாலும், அந்த மனுஷனை நம்மால் வெறுக்க முடியாது. அது மாதிரியான ஒரு உறவு அன்று சித்தியுடன் எற்பட்டது. ஒரு உற்சாகமும், தெளிவான சந்தோஷமும் கூடவே வந்தது.
எங்கள் வீட்டு மர பீரோ டிராயர் ல சித்தியோட அந்த புகைப்படம் வைக்கப்பட்டது. போக வர, நாங்கள் பீரோவைத் திறந்து, டிராயரைத் திறந்து, புகைபடத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தோம். சித்தப்பா அப்படிப் பார்த்தார்களா என்றுத் தெரியாது. பார்த்திருந்தால், அவர்களை அலைக்கழித்த நினைவுகள் எல்லாம் கடல் அலைகள் அழித்த கரை ஓவியம் போல காணாமல் போயிருக்கும்.