நூல்: வள்ளுவா ரோபோட் யுத்தம்
நூல் ஆசிரியர்: திரு இரா நடராசன்
திரு இரா நடராசன் பற்றி: நாம் நம் வாழ்நாளில் 175 புத்தகங்கள் வாசிப்போமா -தெரியாது. ஆனால் ஒரு மனிதன் 175 புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்பதும், அவர் இன்று நம்மோடு உரையாடுகிறார் என்பதும் எத்தனைப் பெரிய சிலாக்கியம்? அவர் எழுத்தில் தொகுத்தவை மட்டும் 175. அவர் எழுதியவை ஏராளம். உதாரணமாக, மாணவர்கள் மத்தியில் அறிவியல் கற்கும் போக்கை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், ‘இன்றைய இந்திய விஞஞ்னானிகள் 100’ என்ற தலைப்பில் இந்தியாவில் பிறந்து சிறந்து விளங்கும் 100 விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு, தினம் ஒரு விஞ்ஞானியை அறிமுகப்படுத்தி, ஒரு கட்டுரை தொடரை ‘புக் டே டாட் காம்’ என்ற வலைதளத்தில் எழுதினார். இதற்கிடையில் யூட்யூப் தளத்தில் பல பேட்டிகளும், தொலைக்காட்சி தொடர்களும் என இயங்கிக் கொண்டே இருக்கிறார். இத்தனையையும் வெற்றிகரமான ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபடியே செய்கிறார். பிரம்மிப்பாக இருக்கிறது. இந்த மனிதனுக்கு ஒரு நாளையில் எத்தனை மணி நேரம் தான் இருக்குமோ தெரியவில்லை. இத்தனை சுறுசுறுப்பாக சமூகத்தின் மீது தீராத அக்கறையோடு சற்றும் தளர்வில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதன். அவரை நம் குழந்தைகள் இத்தனை நெருக்கத்தில் கண்டு, உரையாடுவது என்பது அவர்கள் வாழ்வின் மிகப் பெரிய பேறு.
அவருடைய எழுத்தைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் யதார்த்தம், இயற்கை சுற்றி எளிமையான மொழி நடையில் கொஞ்சம் நகைச்சுவையுடன் அறிவியல் மற்றும் வரலாற்றுப் புதினங்களே ஆகும. அந்தப் புதினங்களில் ஒளிரும் கற்பனை அபாரம். ஐன்ஸ்டீன், “அறிவைக் காட்டிலும் கற்பனைத் திறன் மிக முக்கியம்” என்றார். திரு இரா நடராசனோ, கற்பனைக் கதைகள் மூலம் அறிவியலையும், வரலாற்றையும், சிறந்த கொள்கைகளையும் கடத்துகிறார்.
இப்போது, வள்ளுவா ரோபோட் யுத்தத்திற்கு வருவோம்: மூன்று அறிவியல் புனைவு அடங்கிய புத்தகம்: வள்ளுவா ரோபோட் யுத்தம், ஆப்பரேஷன் பகத் சிங், எம். ஐ. பி. 72 காணவில்லை. புத்தகத்தின் முன்னுரையில் அவர் கூறியபடி, “இவை அக்னிக் குஞ்சுகள்.. நாளைய இருட்டில் வீசப்பட்ட மூன்று ஒளித் துளிகள். ஒவ்வொரு குறுநாவலும் தனக்கென்று ஒரு தீப்பந்தத்தை ஏந்தி எதிர்காலத்தை உஙகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” நாளைய இருட்டில் இன்று எப்படி வெளிச்சம் வீச முடியும்? அதற்கு முதலில் நாளைய இருட்டு எப்படி இருக்கும் என நமக்குத் தெரிய வேண்டும் அல்லவா? உண்மையில், நம்மால் காலவெளியில் பயணிக்க முடியுமா?
இப்போ நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும் எனில் எப்படி போகிறோம்? ஆதி மனிதன் நடந்து போனது போல போகலாம். அப்புறம் சக்கரம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். வட்டமாக இருக்கும் சக்கரம் தான் வேகம் கொடுக்கும் எனக் கண்டுகொண்டார்கள். அப்புறம் அந்தச் சக்கரத்தை இழுக்க மாடு, எருமை எனப் பூட்டிப் பார்த்து குதிரை தான் சரியாக வரும் என முடிவு செய்து குதிரை வண்டிகள் மூலம் பயணித்தார்கள். அப்புறம் நீர் ஆவி எஞ்சின் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து, சற்று வேகமாகச் செல்ல வழி கண்டார்கள். அப்புறம்? எரிபொருள் எஞ்சின் கண்டுபிடித்து அவற்றில் இன்னும் வேகமாகப் பயணம் செய்தோம். அந்த எஞ்சின்களைப் பலவாறாக வடிவமைத்து, திறனை அதிகரித்தோம். இப்போது பாட்டரி கொண்ட மின்சார ஊர்திகளை வடிவமைத்து மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் அடைப்படை காரணி நம்மால் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை. நடந்தே இடங்களைக் கடந்த மனிதனுக்கு இது பூமி என்றோ, இவ்வளவு பெரிய வெளி என்பதோ, இவ்வளவு தூரம் பயணிக்க இயலும் என்பதோ தெரியாது. ஆனால், கடந்த நூற்றாண்டில் மட்டும் எவ்வளவு முன்னேற்றம்??
இப்போது காலவெளியில் பயணிப்பதைப் பற்றி பேசுவோம். காலவெளியில் நடப்பது என்றால் என்ன? ஒரு காலத்தில் இருந்து மற்றோரு காலத்துக்குச் செல்லுதல். உதாரணமாக இன்றிலிருந்து சில வருடங்கள் பின் செல்லுதல், அல்லது முன் செல்லுதல். இன்று இதைச் செய்வதற்கு நம்மிடம் கருவி இருக்கிறதா? ஆம், நம்முடைய சிந்தனைகள். காலத்தில் பின்னோக்கிச் செல்ல நம் ஞாபகங்களும், முன்னோக்கிச் செல்ல நம் கற்பனைகளும் என நம் சிந்தனைகளே காலவெளியில் பயணிக்க நம்மிடம் இருக்கும் இயற்கையானக் கருவிகள். அதாவது நிலத்தில் பயணிக்க நம்மிடம் இருக்கும் கால்களுக்கு ஈடானவை. இன்னும் காலவெளியில் பயணிக்க சக்கரம் கண்டுபிடிக்க வேண்டும். அதெல்லாம் பின் நாட்களில் வரும். இங்கு நம்மோடு இருக்கும் குழந்தைகளுள் எவரேனும் ஒருவர் அதனைக் கண்டுபிடிக்கக் கூடும். ஆனால், அதற்கு முதலில் காலவெளியில் பயணிக்கிறோம் என்பதை நம்ப வேண்டும். ஒன்றுமே செய்யாமல் இருந்தாலே நாம் ஒரு நொடியில் இருந்து இன்னொரு நொடிக்குச் சென்று கொண்டே தான் இருக்கிறோம். காலத்தில் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
வள்ளுவா புத்தகத்தின் கதைகள் நம்மை காலத்தில் முன்னோக்கி வேகமாகச் செல்ல வழி காட்டுகின்றன. திரு இரா நடராசனின் கற்பனையில் ஏறி அமர்ந்தால் போதும். அவை நம்மை முன்னுக்கும் பின்னுக்கும் எனக் காலவெளியில் அழைத்துச் செல்கின்றன. அவ்வளவு கற்பனை. எதிர்கால ரோபோட்டுகள் சூழ் உலகத்தில் வாழ நம்மை பழக்குவிக்கின்றன, ஈராயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளின் வழிகாட்டுதலில். இன்றைய நம் கூடுகைப் போல பிற்காலத்தில் ரோபோட்டுகள் கூடுமாம், அவைகளுக்குள் கொள்கைகள் அடிப்படையில் விவாதங்கள் நடக்குமாம், Philosophy பேசுமாம். அதற்கு திருக்குறளைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுமாம். என்னென்ன கம்பி சுத்துற கதை? என்றே நினைக்கத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் சாத்தியம் என்பதற்கு இன்றைய ChatGPT யும், அவரின் தோழர்களுமே சாட்சி.
MIG 72 காணவில்லை என்ற கதையில், மனிதர்கள் ஏற்கனவே நிலவில் வாழ ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய அறிவியலும், தொழில் நுட்பமும் நம்மை அந்த வாழ்விற்கு அழைத்துச் செல்லுமா இல்லையா? நிச்சயமாக அப்படி ஒரு சூழல் வரும். அப்போது நிலவில் உலாவுவதற்கு என உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட் பூமியில் வழிதவறி சுற்றுகிறது. அது செய்யும் அட்டகாசம் தான் MIG 72 காணவில்லை. அப்படி என்ன அட்டகாசம்? நிலவுக்கென்று உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட் பூமியில் உலவுவதில் என்ன பிரச்சனை? ஒரு காரணி சொல்கிறேன்: நிலவில் பூமியை விட புவியீர்ப்பு சக்தி மிகக் குறைவு தானே? நிலவின் வானமும் பூமியின் வானமும் வெவ்வேறு நிறம் கொண்டவை. நிலவில் கடலோ நீர்நிலைகளோ கிடையாது. ஏன், மழைகூட கிடையாது. சதா எரிகற்கள் வீழும் ஒரு நிலபரப்பு அது. அப்படிப்பட்ட நிலபரப்பில் இருக்க வேண்டிய ரோபோட் பூமியில் நடந்தால்? ஒரே நகைச்சுவை தான். அந்த நகைச்சுவையின் வழியே இத்தனை அறிவியலையும் கடத்தி விடுகிறார். சரி, இத்தோடு முடிந்ததா? பூமியின் இயற்கை காலநிலை மாற்றத்தையும், அதனால் ஏற்படும் அழிவுகளையும் பேசுகிறார். இறுதியில், ரோபோட்டின் அட்டகாசத்தைக் கொண்டே அழிவுகளில் இருந்து மீட்பும் நடக்கிறது. கதை ஆரம்பிக்கும் போது திக் திக் என ஆரம்பித்து, அப்பாடா என மறுவி, அடடா என முடியும் போது அத்தனை மாற்றங்கள் நமக்குள்.
கதைகளை ஒவ்வொன்றாகப் படித்து விட்டு சிறிது அசை போட வேண்டும். பொதுவாக தமிழில் சிறார் இலக்கியம் போதவில்லை என்ற குறை ஒரு பக்கமும், சிறார்கள் தமிழ் நூல்களைப் படிப்பதில்லை என்ற குறை ஒரு புறமும் இருக்கின்றன. இந்தப் புத்தகம் ஒரு சிறந்த தமிழ் சிறார் புத்தகமாக, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும், திக் திக் நொடிகள் பல கொண்டு இந்த இரு குறைகளையும் போக்கும் எனத் திடமாக நம்புகிறேன். அப்புறம், ஒரு இரகசியம் சொல்கிறேன்: இவர் சிறார் இலக்கியம் என்ற போர்வையில், நம் அனைவருக்குமே தான் எழுதுகிறார். இவரது புத்தகங்கள் சிறந்த அறிவியல் அதிசயம்.