ரமலோவ்
நூலாசிரியர்: சரவணன் சந்திரன்
பதிப்பு: உயிர்மை
எனக்கு சரவணன் சந்திரனின் சமூகம் சார்ந்த, அறம் சார்ந்த எழுத்துகளின் மேல் பிரியம். விகடனின் சந்தாதாரராக இருந்தபோது அவருடைய அன்பும் அறமும் தொடர் வாசித்து அவரைப் பின் தொடர்ந்தேன். அவருடைய புத்தகங்களுள் பாவத்தின் சம்பளம், வெண்ணிற ஆடை, சுபிட்ச முருகன் எனக்கு மிகவும் பிடித்தவை. முன்னது இரண்டும் தொகுப்பு. சுபிட்ச முருகனின் ‘எதுவாகவோ அதுவாகவே’ வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. அந்தப் புத்தகம் முடித்தபின்பு எனக்குள் ஒரு பேரமைதி. அதனை நான் இவ்வாறு என் குறிப்புகளில் பதிவு செய்திருக்கிறேன்: “ ‘நான்' அழியும் வழியும், அழிவதற்கான வலிகளும்! A book of symbolisms. கையிலிருக்கும் வெண்ணையை அலட்சியப்படுத்திவிட்டு ஆசைகளுக்குத்தீனி போட ஆரம்பித்து அழிவை நோக்கி நகர்வோம் என்ற புத்தரின் வாக்கை காட்சிப்படுத்தி, பின் அதிலிருந்து விடுபட்டு, கைவிட்ட வெண்ணையைக் கைகொள்ள ஊனை உருக்கி, தன்னை உணர்ந்து, மெய்யை அறிந்து உருக வேண்டிய அவசியத்தை நிதர்சனமாக, நிர்வாணமாக பதிகிறது’. ஒரு புத்தகம் இதைச் செய்ய வேண்டும் என விழைகிறேன் – ஒரு நொடிப் பொழுதோ, இல்லை வாழ்வு முழுமைக்குமோ ஒரு உணர்வை, ஒரு மாற்றத்தை வாசகனுக்குக் கடத்த வேண்டும். ஒரு புது உணர்வின் சுவையையேனும்.
ரமலோவ் வெளியிடப் போகிறார்கள் என அறிந்ததும், ஊருக்குச் செல்லும்போது வாங்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன். அப்போது மனுஷ்யபுத்திரன் அவர்கள் புத்தகத்திற்கு எழுதிய ‘கடலின் தனிமை’ என்ற முன்னுரையை வாசிக்க நேர்ந்தது. அந்த முன்னுரையே என்னைப் புத்தகத்தை உடனே பெற்றுக் கொண்டு வாசிக்கத் தூண்டியது. கொஞ்சம் முயற்சித்து நண்பரின் நண்பர் மூலமாக வரவழைத்தேன். இப்படி முயற்சி செய்து, பிரயத்தனப்பட்டுப் பெற்றுக் கொள்ளும் எந்தப் பொருளுமே சுவை கூடியதாகத் தானே இருக்கும்? இதில் கவனிக்க வேண்டியது: ரமலோவ் புத்தகத்திற்கு செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு காணொளி வெளியிட்டிருந்தனர். ஆனால், எனக்குள் மனுஷ்யபுத்திரன் அவர்களின் எழுத்து தான் உந்துதல் கொடுத்தது. ஆழ்ந்து வாசித்து ஒரு பொருளை விரும்பி வாங்குபவர் பூமர் என்றால், அப்படியே ஆகட்டும்.
நிற்க, சுபிட்ச முருகன் முடித்தபின்பு ஒரு பேரமைதி கிட்டியது எனக் கூறினேன் அல்லவா? ரமலோவும் அதனை எனக்குள் கடத்தியது. புத்தகத்தை முடித்தபின்பு இரு நாட்கள் ரமலோவைப் போலவே சுற்றினேன். யார் இந்த ரமலோவ்? கடலின் மைந்தன். மெத்தாயின் வார்ப்பு. ஆந்திரேயனுடைய வாரிசு. ஆந்திரேயன் நினைவும் நிகழ்வும் ஒன்றாகப் பொருந்தி, கப்பாங்கில் பருவங்களை முன்கூட்டியே உரைக்கிற மெஞ்ஞானி. அவரைத் துரத்தும் கனவைத் துரத்தியபடி கடலினுள்ளே இருந்து கருஞ்சுறாவின் வாயில் புகுவதற்குமுன் முணுமுணுத்தச் சொல் ரமலோவ். அந்தச் சொல் கரையில், வீட்டிலிருந்த மெத்தாயின் காதில் விழுகிறது. ஊரே அவர் இறந்ததாக நம்பும்போது, மெத்தாய் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், தன் வயிற்றைத் தடவி கடலை நோக்கி ‘ரமலோவ்’ என கூவுகிறாள். கப்பாங்கில் தந்தை தான் கடலை அறிமுகம் செய்யவேண்டும் என்பது விதி. மெத்தாய் ரமலோவிற்குக் கடலை அறிமுகம் செய்ய எத்தனிக்கிறாள். அதை கப்பாங் எதிர்க்கிறது. அப்போது காற்றைத் தவிற வேறு எதனுடனும் பேசுவது இல்லை என முடிவெடுக்கிறாள் மெத்தாய். கடலில் திமிங்கலத்திற்கு பாலூட்டுகிறாள். கப்பாங்கே ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகத் திகைத்து நிற்கிறது. இத்தகைய மெத்தாய் குழந்தையான ரமலோவிற்கு காற்றையும், கடலையும், நதியையும் பற்றி எடுத்துக் கூறி, “உடைமையாய் எதனையுமே கொள்ளாமல் தன்னுணர்வற்றுக் கரைவாய் ரமலோவ்” என அறிவுறுத்தி, கடலை வழிநடத்தும் ஆற்றின் பொறுப்பில் அவனை விடுகிறாள். கடலின் மூத்த முன்னோடியான ஆமை அவனைச் சுமந்து செல்கிறது. இந்த ஆந்திரேயன் மற்றும் மெத்தாய்யின் பாத்திர அமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. தன்னியல்பில் தனித்து இயங்கும் ஒரு பெண்ணும் கனவுகளைச் சுமந்து அதனை நோக்கி பயணிக்கும் அவள் கணவனும்!
இத்தகைய ஆந்திரேயனுக்கும், மெத்தாயிக்கும் பிறந்து, ஆற்றின் பொறுப்பில் விடப்பட்டு குழந்தையாய் ஆமையின் முதுகிலேறி கடலில் பயணித்து கப்பாங்கில் வளரும் ரமலோவ் எத்தகைய குணநலன்களுடன் இருக்கிறான்? ஆற்றின் பொறுப்பில் தொடங்கிய பயணம் அவனை எங்கு எப்படி அழைத்துச் செல்கிறது? கப்பாங்கில் அவன் என்னவாக இருக்கிறான்? அவனைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அல்பிக்கும், மம்மூனுக்குமான உறவு எப்படிப்பட்டது? பெண்கள் அவனை என்னவாகக் கருதுகிறார்கள்? அவன் பொதுவாக மனிதர்களை, குறிப்பாகப் பெண்களை எப்படி அணுகுகிறான்? அவனுக்கும் கடலுக்கும், கடலுக்குள் இருக்கும் மீன்களுக்கும் ஆமைகளுக்குமான உறவு என்ன? என விரிகிறது கதை. இறுதியில் கடலின் முகவாயில் இருக்கும் ரமலோவ், மலையின் முகட்டில் வசிக்கும் எப்சியை எப்போது எப்படிக் கண்டடைந்து கப்பாங்கிற்கு அழைத்து வருகிறான், அவன் வாழ்வு எத்தகையதாக மாறுகிறது என முடிகிறது கதை.
புத்தகமே ஒரு மாய உலகை அறிமுகப்படுத்தினாலும், எமிலியின் காதலும், அந்தக் காதலை அவள் கையாண்ட அழகும் என்னைப் பிரமிக்க வைத்தன. “அவனை மடியில் படுக்கப் போட்டு ஒளிரும் தன் கண்களை அவனுடையது வழியாகப் பார்க்க” எத்தனித்து அதனை அடைய அதீத சிரத்தை (ஆத்மார்த்தமாக, ஒரு பிரார்த்தனையைப் போல) எடுக்கும் அவள், அவனுடைய இரு கண்களில் கடலைக் காணும் காட்சி அப்படியே என் மனக்கண் முன். அவளுக்காக ரமலோவ் விட்டுச் செல்லும் முத்து, அவள் இழப்பின் ரகசிய கேவலை மகிழ்ச்சியாகவும், தனக்கென என்று நிறைவடைதலாகவும் மாற்றும் அந்தக் காட்சி அத்தனை அழகாக நமக்குள்ளே நின்றுவிடுகிறது. அந்தக் காட்சியில் காதல் பக்தியாக மாறும் தருணத்தை, உணர்ந்தேன். இத்தனை பிரயத்தனப்படும் எமிலியிடமே எந்தச் சலனமும் அற்று எழுந்து செல்லும் ரமலோவ் காதலுக்கு அப்பாற்பட்டவனா?
அவன் தன்னுணர்வு அடையும் அழகான ஒரு கணத்தில், அவன் கண்களில் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீரும் தொடர்ந்து எழுப்பும் சிரிப்பொலியும், புயலின் மையக் கண்ணாக மாறி, உப்பாகப் படிய முற்படுதலும் என அத்தனை அழகாக உருமாறுகிறான். எப்ஸியோ எந்தப் பிரயத்தனமும் இல்லாமல், தன்னொளியை நாள்தோறும் மெருகேற்றிக் கொண்டே கனவைக் கைவிடாது சுமந்தலைகிறாள். அவர்கள் இருவரையும் இணைக்கும் அந்தத் தருணம் இருக்கிறதே! அடடா, அத்தனை ஆழம். அத்தனை அழகு. பிரயத்தனங்கள் பிரார்த்தனைகள் அர்ப்பணிப்புகள் மூலம் நாம் வேண்டுபவை கிட்டாமல் போகலாம்- ஆனால் அவை தான் நம் வாழ்வை முழுமையாக்குபவை என எமிலி மூலம் நுட்பமாகக் கடத்தும் ஆசிரியர், நமக்கானது ஏழு கடல் தாண்டி இருந்தாலும் நம்மை வந்தடையும் என்பதை எப்ஸி மூலம் உணர்த்துகிறாரோ?
கதையின் மையப்புள்ளியாக ரமலோவே ஆன போதிலும், கதையினூடே செம்படவனின் வாழ்க்கையும், அவர்களின் விதிகளும், கொண்டாட்டங்களும், கூட்டங்களும், அவர்களுடைய கடலைப் பற்றிய கணிப்பும், கடலோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அவர்களுக்குள் இருக்கும் உறவும், கபடற்ற உரையாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக, வெட்கமும் கூச்சமும் வலிந்து திணிக்கபடாதப் பெண்களின் இயக்கத்தினை ரசித்தேன். அத்தனை அழகு அவர்களில்.
இத்தகைய ஒரு கனமான கதைகளத்தில் காலச் சூழலும், காற்றும் கடலும் வெப்பமும் நடத்தும் நர்த்தனங்களும் அத்தனை அழகாகப் பொருந்தி போயிருக்கின்றன. புத்தகம் முழுக்க சரவணன் சந்திரனின் கடலும், கடல் சார்ந்த நுண்ணறிவும், அவருடைய காலச் சூழலைப் பற்றிய புரிதலும் அவைகளைக் கடத்திய விதமும், பருவத்தைக் கணித்து சொல்லுதலும் என மிளிர்கிறது எழுத்து. அவை மட்டுமல்ல, புத்தகம் நெடுக பலதரப்பட்ட மீன்களைப் பற்றின குறிப்புகளும் அவற்றின் சத்துகளும். மொத்தத்தில் கற்ற அத்தனை வித்தைகளையும் ரமலோவின் கதை மூலம் மிக இயல்பாக இறக்கியிருக்கிறார். இவற்றினூடே வாழ்க்கை பாடங்களும்! இங்கு இந்தக் கதை ஒரு கருவி தான். ரமலோவ் என்ற பாத்திரம் அந்தக் கதையையும், இத்தனை அறிவையும் சுமந்து அலைகிறான் – பெரும்பாலும் மௌனமாக!
மௌனம் பெரிய ஆயுதம் தான் போலும்! மௌனத்தில் உற்று நோக்கி உலகை அறிதல், அதைவிட தன்னை அறிதல் தானே தியானம்? கதை நெடுக தியானமும் மன அமைதியும் நுட்பமாக அறிவுறுத்தப்பட்டுள்ளன. காதுள்ளவன் கேட்க கடவன், பார்வையுள்ளவன் பார்க்கக் கடவன்! ஆகவே, இப்புத்தகத்தை மேஜிக்கல் ரியலிசம் என மனுஷ்யபுத்திரன் வகைமைப்படுத்தியிருந்தாலும் என்னளவில் இது ஒரு தியானம். 191 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தை கிட்டத்தட்ட 2 வாரமாக வாயில் ஒதுக்கிய கமர்கட்டாய் சுவைத்த எனக்குள் இறுதியில் ஆழ்ந்த அமைதி. என்னளவில் இந்தப் புத்தக வாசிப்பு ஒரு பேரமைதியையும் பேரருளையும் நோக்கிய ஒரு பயணம்.
புத்தகத்தைப் பற்றிக் கூறியாயிற்று. அதன் அட்டைப்படமே அமர்க்களம். கடலின் நிறத்தில் மினுங்கலாக. கடலே அரவணைப்பது போல! முகப்பில் இருக்கும் அந்த கடல் குதிரையும், அந்த அலையினூடே இருக்கும் ஒரு மனித உருவும், திமிங்கலமும் – ஒரு அட்டைபடத்தில் எத்தனை அழகு!
சரவணன் சந்திரனின் மாறுபட்ட எழுத்து நடையினால் சில இடங்களில் வாசிக்கக் கொஞ்சம் சிரமப்பட்டேன் எனினும், எழுத்தும், எழுத்துக் கடத்திய அறிவையும், அமைதியையும் சிலாகிக்கிறேன். எமிலிக்குக் கிட்டிய அந்த நல்முத்து நமக்கும் கிட்டட்டும். உப்பாகவே கரைந்து நிற்போம்!