Monday, August 3, 2020

Conversations with Hem: அன்பான கடவுள்


எனக்கு என் கடவுளை மிகவும் பிடிக்கும்
என் கைப்பிடித்து, என்னைப் போஷித்து,
என்னைக் காப்பாற்றி, எனக்கு இளைப்பாறுதல் அளித்து,
என்னை என்னையாகவே நேசிக்கிற என் கடவுள்.
உண்மையாகவே,
பார் உள்ள அளவும்,
நான் உள்ள அளவும்
என்னை நேசிக்கிற கடவுள்!
அவரை நெருங்க எத்தனித்தேன்.
அன்பான கடவுள் அல்லவா? நெருங்கி செல்ல அனுமதித்தார்.
உற்சாகமாய் இருந்தார்.
பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தார்.
சிரித்த முகமாய் இருந்தார்.
எப்பொழுதும் சாந்தமாய் இருந்தார்.
எப்பொழுதும் பிரகாசமாய் இருந்தார்.

‘கடவுளே, நானும் உங்களைப் போல் ஆகவேண்டும்’ என்றேன்.
‘ஆன்பாக இரு மகளே, அது போதும்’, என்றார்.
‘நான் அன்பு செலுத்துகிறேனே’ என்றேன்.
என்னை கைப்பிடித்து அழைத்து, அருகில் அமர்த்தி,
‘அன்பு செலுத்துவதற்கும், அன்பாக இருப்பதற்கும் நீண்ட இடைவெளி உண்டு’, என்றார்.
தொடர்ந்து,
‘கடவுளின் அன்பு உலகை சுமக்க வேண்டும்’, என்றார்.
‘ஆனால், நீங்கள் சுமக்கவில்லையே’ என்றேன்.
‘கடவுள், உலகம் சுமப்பதுத் தெரியாமல் சுமக்க வேண்டும்’, என்றார்.
‘யாருக்குத் தெரியாமல்?’ என்றேன்.
‘கடவுளுக்கே தெரியாமல்’, என்றார்.
‘அதெப்படி’, என்றேன்.
வாரியணைத்துக் கொண்டார்.
‘மகளே!
கடவுளுக்கு நிறைய நண்பர்கள் உண்டு, எந்த ஒருவரும் உற்றவர் அல்ல;
கடவுளுக்கு நிறைய வலிகள் உண்டு, எந்த ஒரு வலியும் சிறியதோ, பெரியதோ அல்ல;
கடவுளுக்கு நிறைய காயங்கள் உண்டு, எந்த ஒரு காயத்துக்கும் மருந்து இல்லை;
கடவுளுக்கு நிறைய கோபங்கள் உண்டு, எந்த ஒரு கோபமும் சலனப் படுத்துவது இல்லை;
கடவுளுக்கு நிறைய வேலைகள் உண்டு, எந்த வேலையும் முழுக்கக் கவனம் ஈர்ப்பது இல்லை;
கடவுள் எல்லாம் இருந்தும், ஏதுமற்று இருத்தல் வேண்டும்’, என்றார்.
நான் வியந்து, ‘இது எவ்வாறு சாத்தியம்?’ என்றேன்.
‘உனககுள் இருக்கும் உன்னைத் துற’, என்றார்.
‘நானே ஒரு தனித் தீவு, எனக்குள் நானா?’ என்றேன்.
‘நீ தீவல்ல, தீவாகிக் கொண்டாய்’, என்றார்.
‘நான் தீவல்லாவிடில், நான் யார்?’ என்றேன்
‘நீ ஒரு பெரிய சமுத்திரம்’ என்றார்.
அதிர்ச்சியானேன்!
‘நீ சமுத்திரத்தின் ஒரு துளி’ என்றார்.
‘சமுத்திரமா? சமுத்திரத்தின் துளியா?’ என்றேன்.
‘இரண்டும்’ என்றார்.
மீண்டும் அதிர்ச்சி!
‘எப்படி?’ என்றேன்.
‘உனக்குள் இருக்கும் சமுத்திரம் உலகெங்கும் வியாபித்து இருக்கிறது’ என்றார்.
இப்பொது மேலும் குழப்பம்:
‘எனக்குள் சமுத்திரமா? நான் சமுத்திரமா? நான் சமுத்திரத்தின் துளியா?’ என்றேன்?
‘நான்’ அழிந்தால் சமுத்திரம், சமுத்திரமாகவே இருக்கும். துளியாகவோ, உள்ளாகவோ இராது’, என்றார்.
அயர்ச்சியாய் இருந்தது.
‘எவ்வாறு என்னை அழிப்பது?’ என்றேன்.
‘அன்பால்’, என்றார்!
‘அன்பால் ஆக்கத் தானே முடியும், எப்படி அழிப்பது’ என்றேன்.
‘அன்பு இருளை அழிக்க வல்லது’ என்றார்.
‘இங்கு இருள் எங்கிருந்து வந்தது’ என்றேன்.
‘உனக்குள் இருக்கும் நீ தான் இருள்’, என்றார்.
‘இருள் விலக என்ன செய்ய வேண்டும்?’ என்றேன்.
‘அமைதியாகக் காத்திரு’ என்றார்.
‘எவ்வளவு நேரம்?’ என்றேன்.
‘நீ கடவுள் என்பதை உணராமல், கடவுள் ஆகும் வரை’ என்றார்.
‘அது எப்படி புரிந்துக் கொள்வது’ என்றேன்
‘அதனைப் புரிதல் அவசியம் அற்றது’ என்றார்.
எனக்குப் பிடிபடவில்லை,
ஆனாலும், காத்துக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment