Saturday, August 21, 2021

வள்ளல் உலகு

 நானும் அவனும் கடற்கரைக்குச் சென்றோம்:

அவன் ஒரு நத்தைப் பிடித்தான்,

நான் சில சிப்பிகள் பொருக்கினேன்.


நானும் அவனும் தோட்டம் சென்றோம்:

அவன் ஒரு இளநீர் அருந்தினான்,

நான் ஒரு கொய்யா உண்டேன்.


நானும் அவனும் பாராசூட்டில் பறந்தோம்:

அவன் பறவையைக் கண்டு குதூகலித்தான்,

நான் வானத்தின் வண்ணங்களைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.


நானும் அவனும் ஒரு படம் பார்த்தோம்:

அவன் அதன் ஓர் காட்சியை உள்வாங்கி வரைந்தான்,

நான் அதன் ஒரு உரையாடலில் குறிப்பிடப்பட்ட புத்தகத்தைப் படித்தேன்.


நானும் அவனும் மொட்டைமாடியில் உலவினோம்:

அவன் இரவின் நிசப்தத்தை சுவாசித்தான்,

நான் இருளின் ஒளியை சிலாகித்தேன்.


நானும் அவனும் தனித்தனி,

எங்கள் தேடல்கள் வெவ்வேறு,

எனினும், எல்லா சூழ்நிலையிலும்...

அவரவருக்கானவைகளை அருளிக் கொண்டே இருக்கிறது

விந்தைமிகு வள்ளலான இவ்வுலகு!

- 21/08/2021

No comments:

Post a Comment