Monday, September 4, 2023

அப்பன் - புத்தக விமர்சனம்

 அப்பன் -  அழகுநிலா

அப்பா-மகள் உறவு கொண்டாடப்படவேண்டிய ஒன்று. பெண்ணாகப் பிறப்பதற்கு மாதவம் புரிய வேண்டும் என்றாலும், பெண்ணாக வாழ்வதற்கு மாவலிமை வேண்டும். இத்தனை வலிமையும் கொண்டு நித்தமும் போராடியே வாழும் பெண்களின் இடர்களைப் பெரிதும் கண்டுகொள்ளாத ஆண், தன் மகள் எனும் போது மட்டும் தானே பெண்மையான, மென்மையான தாயாக மாறும் மாயம் பற்றி நிறைய பேசப்பட வேண்டும். அந்த வகையில் அப்பன் புத்தகம் ஒரு அழகு.

அட்டை முகப்பே அழகாய் இருக்கிறது – முன் அட்டையில் பாதி முகமும், பின் அட்டையில் பாதி முகமும் என திரு பஞ்சாட்சரம் அமைதியே உருவாக, மிடுக்காக, கம்பீரமாக நிமிர்ந்து இருக்கிறார். ஆனால், புத்தகம் முழுக்கக் காற்றாற்றின் சித்திரம் மேலெழும்புகிறது. மனிதன் தன் வாழ்வு முழுவதும் எந்த தயக்கமும் இல்லாமல், யாருக்குகாகவும் தன்னை சமரசம் செய்யாமல், தானாகவே வாழ்ந்திருக்கிறார் எனப் புரிந்துக் கொள்கிறேன். 

புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வாழ்க்கை நிகழ்வை விவரிக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் ஒரு காணொளியாய் விரிகிறது. அழகுநிலா விவரிக்கும் வீடும், கிணறும், மாட்டுக் கொட்டகையும், சாலையும், பள்ளியும், ஆட்டோவும் நம் கண் முன்னே காட்சியாகிறது. திரு பஞ்சாட்சரம் தன் மகளை ‘அழகப்பா’ என மகளை அழைப்பதும், தன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அவர்களுக்கான வெளியை அளித்திருப்பதும், தன்னுடன் அவர்கள் முரண்படும்போதெல்லாம் அவர் அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்திருப்பதும் அழகுநிலாவின் எழுத்து கோடிட்டுக் காட்டுகிறது. 

அழகுநிலாவின் அப்பா தன் மாமனாரின் மரணத்தின்போது அழுததும், தன் நண்பனின் நிலைக்கண்டு நிலைக் குழைந்துப் போனதும், எதிர்த்த வீட்டுத் திருட்டுப் பிரச்சனைக்காகத் தன் தூக்கத்தைத் தொலைத்து அலைந்ததும், மகளின் காதணியைத் தேடி அலைந்ததையும் பற்றி விவரிக்கையில், அவருடைய மனதின் ஈரமும், அவருடைய பொறுப்புணர்வும், மிளிர்கிறது.

பொதுவாக நமக்கு மிக நெருக்கமானவர்களைப் பற்றி, உணர்வுப்பூர்வமாக எழுதும்போது, ஒரு நேர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுவோம். அதை வாசிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தும். அதை அழகுநிலா அழகாக கையாண்டுள்ளார். திராவிட சித்தாந்தத்தை ஆழமாக உள்வாங்கியிருக்கும் தன் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிட்டு, அவரே சாதிய அடுக்ககளைப் பின்பற்றுவதைப் பற்றியும் சொல்கிறார். தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனக்குக் கிடைக்காதப் படிப்பை அள்ளி அள்ளி கொடுக்கும் தகப்பன், தன் அகந்தைக்கு எதிராக மகள் கேள்வி எழுப்பும்போது வெஞ்சினம் கொள்கிறார். தன் மாமனாரிடம் பாசமாக இருக்கும் மருமகன், அவர் மேல் கோபமாய் இருக்கும்போது வீட்டுக்கு வந்தவரிடம் பேசாமல் போனதையும் பதிவு செய்கிறார்- என் அப்பா தான் உலக மகா யோக்கியர் என இல்லாமல், என் அப்பா இத்தனை நிறை குறைகளோடும் மனிதனாக வாழ்ந்தும், எனக்கு அவர் தான் ஹீரோ என!

எந்த உறவிலும், புரிதல் தான் உறவின் பாலத்தைப் பலப்படுத்தும். அந்த வகையில், பல விஷயங்களில் நிலா தன் தந்தையுடன் முரண்பட்டாலும், அவரைப் பற்றிய புரிதலை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார் – உதாரணமாக, அவரின் கோபகுணத்தின் காரணிகள், அவருடைய மது அருந்தும் பழக்கத்தின் காரணிகள் என...

இவை எல்லாவற்றையும் விட, புத்தகம் முழுக்க அப்பாவை பற்றியே எழுதினாலும் அவருடைய அம்மாவால் தான் அப்பா முழுமை அடைகிறார். அவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் நிரப்பும் விதம் மிக மிக அழகான சித்திரம்.

மிக நெகிழ்ச்சியான புத்தகம். வாழ்த்துக்கள் நிலா!

No comments:

Post a Comment