Wednesday, December 15, 2021

தேடிய கோணங்கள்

ஒரு அழகான ஞாயிறு மதியம்
அவர்கள் ஐவராய்க் கடற்கரைக்கு வந்தார்கள்:

முதலாமாவனுக்குச் சிப்பிகளின் மீது காதல்:
கடற்கரை மணலைத் தோண்டி, கிளறி,
அழகழகான, வழுவழுப்பான, நிறம்நிறமான
சிப்பிகளைத் தேடிப் பொறுக்கினான்.

இரண்டாமவனுக்கு அலைகளின் ஆர்ப்பரிப்பு மிகவும் விருப்பம்:
கரையில் நின்று அவை எழும்புவதும், அடங்குவதுமான
அழகை ரசித்து, அவைகளைத் துரத்திப் பிடித்து,
அவைகளின் ஓயாத உழைப்பை சிலாகித்தான்.

மூன்றாமவனுக்கு ஆழ்கடலின் அமைதியில் நாட்டம்:
கடலும் வானமும் சங்கமிக்கும் பேரழகுக் காட்சியும்,
கடல் தன்னுள் வியாபித்துள்ள உயிர்களையும்,
அவைகளின் திறந்த, பரந்த பக்குவத்தையும் மெச்சினான்.

நான்காமவனுக்குக் கடலை சுற்றியுள்ள வியாபாரம் மீது ஆச்சரியம்:
சுண்டல், மீன் வறுவல், அப்பளம், பஞ்சுமிட்டாய், பொம்மை விற்போர்;
மீன் பிடிப்போர், வலைப் பின்னுவோர், கடற்கரை மகிழ்விளையாட்டு என
ஓரு கடலையும், அதன் பேரலையையும், சுற்றி எவ்வளவு வாழ்வாதாரம்?

ஐந்தாமவனுக்கோ வந்திலிருந்துத் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை:
கடலின் கொந்தளிப்பு, அலைகளின் பேரிரைச்சல்,
ஒயாத வெயில், சுற்றியுள்ள மக்களின் கூச்சல் என
அருவருப்பைத் தூண்ட, கைகடிகாரத்தைத் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரே கடலில்,
ஒவ்வொருவரும் தாங்கள் தேடியதையே கண்டார்கள்-
எனில், அவர்கள் அக்கடலை தங்கள் கோணங்களுக்குள் அடக்கினார்கள்,
தனியொரு மனிதனைப் பற்றிய நம் தீர்ப்புகளைப் போல்!
கடல் என்ற பரந்த வெளியை அடக்க முடியுமோ?!
மனிதர்களைப் பற்றிய நம் தீர்ப்புகளும் தீர்வுகள் ஆகுமோ?!
-Dec 15,2021

No comments:

Post a Comment