Tuesday, August 1, 2023

அவறுடன் உரையாடல்: வனம்


வனம்

சலிப்புடன், “இவ்வளவு தானா வாழ்வு?” என்றேன்.

எதை வாழ்வென்கிறாய்?” என்றொரு குரல்.

திடுக்கிட்டுத் திரும்பினேன். அவறே தான்!

தொடர்ந்து, “நீ குடும்பம், பணம், நாடுகள், பயணம், சாலைகள்,

என நிறுவனங்களின் நிறுவப்பட்ட சட்டங்களைப் புரிந்து, 

ஓடி, ஆடி, உண்டு, உறங்கி இயங்குகிறாய். 

இந்த இருத்தலின் பெயர் வாழ்வல்ல!” என்றாற். 

அப்படியெனில் வாழ்வென்றால் என்ன?” என்று குழம்பினேன்.

அவறோ, முறுவலித்தவாறே

நீ வாழ இந்த பேரண்டத்தின் நீ என்ற அடர்ந்த வனம் வேண்டும்.

நீயோஉன்வனத்தைத் தொலைத்து, ‘நிறுவனத்தில் குறுகினாய்!” என்றாற்.

பேரண்டத்தின் வனம் என்கிறீர்களே? நான் சிறிய கல் அல்லவா?” எனக் கேட்டேன்

உன்னை சிறிய கல்லாக உணர வைத்தது தான் நிறுவனங்களின் வெற்றி!

 நீ ஒரு பெரும் வெளி! உனக்குள் பயணம் செல். வாழ்வாய். சலிப்பே இராதுஎன்றாற்!

மலங்க விழித்து, மேலே பார்த்தேன்.

அங்கே இறந்த என் தாத்தா மரச் சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தார்.


  • சவிதா, 1 ஆக 2023

பி.கு: அவற் = அவன்/அவள் (அவன் ஆண்பால். அவள் பெண்பால். இரண்டுக்கும் பொதுவாக, மெய் எழுத்துக்களில் "ள்" க்கும் "ன்" க்கும் இடையில் இருக்கும் "ற்" தேர்வு செய்தேன்! 🙂



No comments:

Post a Comment