வா வா என்ற என்னுடைய குழந்தை அழைப்பில்
மழலையாய் வந்தாய்
அம்மாவிலிருந்து ஆசான் வரை உறவுகள் தந்தாய்
பாடமாய் மதிப்பெண்களாய் பாரமானாய்,
பழுவாய் இழுத்து வந்து உன்னைப் பழிக்கையில்
நீ கூறிய கதைகளால் இரக்கம் பெற்றாய்:
மெல்ல என் காதலியானாய்:
மெய் உணர்த்தி, உயிரூட்டி
உயிரும் மெய்யுமாய்,
மெய்யும் உயிருமாய்!
கிறக்கத்தில்,
உன்னை முற்றிலும் அறிய முற்பட்டேன்:
நீயோ, முதலும் முடிவும் இல்லாது,
‘ஏலே’ முதல் ‘ஏனுங்க’ வரை,
சமணம் முதல் கணினி வரை,
அனைத்துக்கும் முகவரியாய் இருக்கிறாய்!
சட்டங்களுக்குள் ஒளித்து
வைக்க முயல்பவர்களுக்குப்
பழிப்புக் காட்டி
என் சுதந்திரமானாய்!
No comments:
Post a Comment