Sunday, July 20, 2025

வெயிலின் கூட்டாளிகள் புத்தக விமர்சனம்

 வணக்கம். இன்று நான் திரு கணேஷ் பாபு எழுதிய வெயிலின் கூட்டாளிகள் சிறுகதை தொகுப்பைப் பற்றி பேச போகிறேன். 15 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு முழுவதும் பெரும்பாலும் சிங்கப்பூர் சூழலிலே எழுதப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தை சிங்கப்பூர் புத்த்கத் திருவிழாவில் வாங்கினேன். அன்று திரும்பும் வழியில் MRT யிலேயே வாசிக்க ஆரம்பித்தேன். கதையை விட எழுத்து நடை என்னை ஈர்த்தது. மிக அருமையான மொழி நடையில் பல தரப்பட்ட மனிதர்கள் மேலும், மனிதர்களின் மனதிற்குள்ளும் வெயில் பாய்ச்சுகின்றன இக்கதைகள். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இருந்தாலும் உயிரூட்டுகின்றன, இக்கதைகள்! உண்மையிலேயே இந்நூலின் மாந்தர்களும், கருவிகளாகத் திகழ்பவையும் புது பார்வையும், கோணமும் அளித்து புது வெளிச்சம் பாய்ச்சும் வெயிலின் கூட்டாளிகள் தாம்!

முதல் கதை, கல்மோகினி. அதன் முதல் பத்தியிலேயே, “இருள் வரும்போது அதனுடன் அச்சமும், அறியமுடியாமையும் மனதில் கவிகிறது” என ஆரம்பித்து, கதையின் இடையில், “ஆனாலும் எல்லாமும் முடிவில் கண்கள் ஊடுருவ முடியாத இருளில் தான் சென்றமிழ்கிறது” எனக் கோடிட்டு, இறுதியில், “இருள் என்னை முற்றவிழ்த்துவிட்டது. சட்டென அந்த மௌனம் என் அகத்தைப் பிறாண்டியது. இந்த கரடுமுரடான நிலவெளிக்கு என் அகத்தின் மௌனத்தைச் சீண்டத் தெரிந்திருக்கிறது” என இருளைக் கதை நெடுகத் தூவி, பல தளங்களைத் தொடுகிறார் எழுத்தாளர். பலாப்பழம் போல, வெளியே அச்சத்தைக் கொடுக்கும் இருள், எப்படி அகத்தைப் பிராண்டுகிறது பாருங்கள். உரையாடலே இல்லாத இந்த சிறுகதையில், அபர்டீன் நகரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த ஒரு கோட்டையைக் காணப் பயணப்படும் ஒரு மனிதனின் பயணத்தை அவனுடைய வாயிலாகவே விவரிக்கிறது. உரையாடல்கள் இல்லாமல் இருந்தாலும், கதை நம்மையும் அம்மனிதனுடன் பயணப்பட வைக்கிறது. அவருடைய முற்காலமும், அவர் முற்காலத்திற்கும் இந்த பயணத்துக்குமான பிணப்பு அழகாகக் கோர்க்கப்பட்டுள்ளது. அழகு. இந்த கதை ஆங்கிலத்தில் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

நாற்பதுக்குள் நுழைதல் என ஒரு கதை. நம்மில் பலர் 40க்குளோ அடி எடுத்து வைக்கக் காத்திருக்கிறோம், இல்லையெனில், சமீபத்தில் 40க்குள் நுழைந்திருக்கிறோம். நம் மன உளைச்சல்களைப் படம் பிடிப்பதாக ஆரம்பிக்கிறது இக்கதை. பொதுவாக, சுமார் 10 வயது வாக்கில் ‘நான்’ என்ற உள் மனிதனை நாம் அடையாளம் கண்டுகொண்டு அல்லது உருவாக்கி, அந்த மனிதனுக்கு ஒரு உருவம் பொருத்தி, அந்த உருவத்தைப் பாதுகாத்துக் கொண்டே முப்பதுகளின் பிற்பகுதி வரை கழிக்கிறோம். அந்த உருவத்துடனான உரையாடல்களும் வளர்ந்து கொண்டே போகிறது. தெரிந்தோ தெரியாமலோ நடுத்தர வயதைத் தொடும் தருணம் ஒரு சிறு அலைகழிப்பு- அத்தனை வருடங்களாக நமக்குள் சேர்த்து வைத்த அழுக்கும், அழகுகளும் நிரம்பி வழிய, “நான்” என்ற பிம்பத்தினைப் பற்றிய கேள்விகள் மேலேழும்பும். இத்தனை காலம் பாதுகாத்து வந்தது ஒரு வெற்று பிம்பம் தான் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பு ஒரு புறம், தெரிந்த ‘நான்’ ஐ ஒதுக்கு விட்டு வாழத் தெரியாது என்பதால் அதனோடு வலுக்கட்டாயமானப் பிணைப்பு ஒரு புறம் என குழப்பமும், சஞ்சலமும் நிரம்பி இருக்கும். ‘முப்பதுகளின் இறுதியில் அவனுக்குள் மெல்ல சுரக்கத் துவங்கியிருந்த முன்னறியாத பதற்றமும் கழிவிரக்கமும் இப்போது பேருருவம் எடுத்திருந்தன. ஒரு ராட்சத பெண்டுலம் போல அவனுக்குள் இடமும், வலமும் நகர்ந்து ஓயாத இரைச்சலையும், அலைக்கழிப்பையும் ஏற்படுத்திவிட்டிருந்தன’ என இந்த குழப்பங்களை மிக அழகாக வார்த்தைகளால் கடத்துகிறார். “தின்னத்தின்ன தீராத பெரிய பழம் என இந்த வாழ்வை அவன் கற்பனை செய்திருந்தான். நீருக்குள் போட்ட உப்புக்கல்லாய் வாழ்வு மெல்ல மெல்ல சிறுத்துக் கரைவது அவனுக்கு தெளிவாக புலப்படலானது” என்ற இரண்டு வரிகள் போதும் நிதர்சனத்திற்கு வெளிச்சம் பாய்ச்ச. இது மட்டுமல்ல, 40களின் துவக்கத்தில், மனதைத் துளைக்கும் ஓராயிரம் கேள்விகளைப் பற்றி மிக நெருக்கமாக விவரிக்கிறார். தன் மன உளைச்சலை நீக்க முயற்சித்து, அவன் ஒரு மனநல மருத்துவரைக் கூட ஆலோசிக்கிறான். வியாக்கினாமும், மாத்திரையும் கிடைத்ததே ஒழிய, உளைச்சல் அடங்கவில்லை! இறுதியில் அவன் தலைக்குமேல் காலமில்லாது விரிந்திருந்த வானமும், அவன் பார்வையை கண்ணுகெட்டிய தூரம் வரை நிரப்பியிருந்த பொன்னிற வெயிலும் வயதற்று இருந்தாலும், முதுமை தீண்டாமல் ஒளிர்வதை அவனுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பதன் அவசியத்தை உணர்த்தியது. தன் பிரச்சனையும், தான் என்ற பிம்பமும் ஒரு பொருட்டேயில்லை என்பதைப் புரியும் அந்த தருணம் அவனுக்கு உடனடி விடுதலை கிடைக்கிறது. மிக அழகாய் இருக்கிறது இந்த கதை. நான் இந்த கதையை வரி வரியாக சிலாகித்து மீண்டும் மீண்டும் வாசித்தேன்- ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வரியும் என்னை ஈர்த்தன. தன் வாழ்க்கையைப் பார்வையாளனாகக் கவனிக்கும் ஒருவரால் மட்டுமே இதனை இத்தனை நுட்பமாக எழுத முடியும். நம் வேதங்களும், தியானப் பயிற்சிகளுமே அப்படி பார்வையாளனாகக் கவனிக்கத் தானே பழக்கப்படுத்துகின்றன? 

தியானம் என்கிற போது புத்தரை நினைப்போம் தானே! இந்த புத்தகத்தில் புத்தரும் இருக்கிறார் - பிடிகடுகு என்கிற கதையில் சாவே காணாத வீட்டில் கடுகு வாங்கி வர புறப்பட்ட பெண்ணின் வடிவில்! ‘அவள் கடப்பது தூரத்தையல்ல, காலத்தை.’ எனக் குறிப்பிட்டு, ‘காலம் அவள் மேல் மோதி உதிர்ந்தபடியே இருக்கிறது’ என முடிக்கிறார். தொடர்ந்து, காலம் அவள் முன் மண்டியிடுவதற்கான காரணத்தையும்  அவள் பயணத்தின் தீவிரத்தையும் விவரிக்கிறார். பின்பு இதையும் சொல்கிறார்: அவள் சாதாரணமாக வாழ்ந்து, பிற மனிதர்களைப் போல சாதாரணமாக மாண்டு போயிருப்பாள் தானே! ஆனால் அவளோ, பிடி கடுகின் தேடுதலில், எல்லைகளற்று பூமி முழுவதும் உலாவுகிறாள். எழுத்தாளர் சொல்கிறார், “ஒரு பெண்ணான கோதமி தோல்வியை ஒப்புக்கொள்ளக் கூடியவள் தான். ஆனால், ஒரு தாயான கோதமி ஒருபோதும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை.” தொடர்ந்து, எங்கேனும் ஒற்றை வினாடி மின்னி மறையும் ஒரு சிறுதுளி வெளிச்சம் காரிருளை வென்று வசப்படுத்தும். அதுவே இயற்கை என்று நம்பியவளாக அந்தச் சிறுதுளி வெளிச்சத்தைத் தேடி அவள் அலைகிறாளாம். எங்கு தெரியுமா? சிங்கப்பூரின் சாலைகளில்! இறுதியில், ஒரு பிட்சு மூலமாக ஆசையையும் மரணத்தையும் அழகாக இணைக்கிறார். கதையின் இறுதியில், க்ளெமண்டியில் இருந்து ஜுராங் கிழக்கு செல்லும் சாலையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் புத்தர் என் மனதுக்குள் மத்தியான வெயிலில் பொன்னிறமாக ஒளிர்ந்தார்!

தொலைவு என்றொரு சிறுகதை. சிங்கப்பூர் சூழலில், இன்றைய பெற்றோருக்கு இருக்கும் முக்கியமான ஒரு சவால் - பொது சமூகத்தின் முன் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் எப்போதும் நிரூபித்தே கொண்டிருக்க வேண்டிய இணக்க நெருக்கடியைச் சாடுகிறது. ஓரு அப்பா, தன் மகனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுகொடுக்க முனைகிறார். இது தான் கதை சூழல். இது தான் முழு கதையும். கதையின் மூலம் குழந்தை வளர்ப்பும், பெற்றோர்களின் அங்கலாய்ப்பும் கடத்தப்படுகின்றன. ‘நாம் நினைச்சத சாதிக்கிறதுக்காக குழந்தைகள் படைக்கப்படல. குழந்தைகள் நெனச்சத சாதிக்க வைக்கிறதுக்காகத்தான் நாம படைக்கப்பட்டிருக்கிறோம்.’ என்ற வரிகள் மூலம் கலில் ஜிப்ரான் நினைவுபடுத்தப்படுகிறார். ஒரு தகப்பனின் தவிப்புகள் மிக நுட்பமாகக் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் தன் மகனை அணுஅணுவாக ரசித்து, அவனுடைய ஆசைகளைப் பார்த்து பார்த்து நிறைவேற்றும் தகப்பன்-அதே தகப்பன் தான் தன் மகன் சைக்கிள் ஓட்டுவதில் சுணக்கம் காண்பிக்கையில், சொல்லி கொடுக்கும் பாடத்தில் கவனம் தப்புகையில் வெறிகொண்டு மகனை அடித்து விடுகிறார். ‘அவனுக்கு எதையாவது கற்றுத்தரும் போதெல்லாம் அக்கறையில் தொடங்கி அதிகாரத்தில் முடிகிறது. அதிகாரம் என்பது எந்த ரூபத்தில் இருந்தாலும் முடிவில் அசிங்கமாகிவிடுகிறது’ என்ற ஒற்றை வரியில் எல்லா பெற்றோரின் மனப்போராட்டமும் வார்த்தைகளாக வதைக்கின்றன. பொறுப்பு அதிகாரமாக உறுமாறும் அந்த நொடி மிகக் கச்சிதமாக வடிவாக்கம் பெற்றுள்ளது. ஆனால், இக்கதையில் வரும் அம்மா எல்லா நேரங்களிலும் மிக நிதானமாக இருக்கிறார், அவர் தன் கணவனைக் கண்டிக்கவும் செய்கிறார், மகனை அரவணைக்கவும் செய்கிறார். மகனுடைய பார்வையில் முதலில், அப்பாவைக் கண்டு பயப்படுகிறான். பின்பு, அம்மாவின் அரவணைப்பு கிடைப்பது தெரிந்தவிடன் அப்பா மிரட்டும்போது அம்மாவிடம் போகவேண்டும் எனக் கதறுகையில் அப்பா மிரள்கிறார். இறுதியில், ‘போங்கடா நீங்களும் உங்க சைக்கிளும்’ எனக் கூறும் வகையில் அப்பாவே அதிர்ச்சியாகும் வண்ணம் வேகமாக சைக்கிள் ஓட்டுகிறார்.

இப்படி குழந்தைவளர்ப்பில் பெற்றோரின் மனக்குழப்பம் ஒரு பக்கம், இல்லாத குழந்தைக்காக பரிதவிக்கும் ஒரு தாயின் மனமும் செயலும், பிறந்ததில் இருந்து ஒரு மனிதனிடம் ஒவ்வொரு பருவத்திலும் வெயிலின் பங்கு என ஒவ்வொரு கதையும் மிக உணர்வுபூர்வமாகவும், மொழியின் வீரியத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது. இறுதியாக, விடுதலை என்ற கதையும், அதில் மரணம் அணுகப்பட்டிருக்கும் முறையும் பல சிந்தனைகளையும், கேள்விகளையும் நமக்குள் கடத்தும். மிகக் கச்சிதமாக இதனை இறுதி கதையாக வைத்திருக்கிறார்.  ‘ஆனாலும் என்னால மரணத்தையே புரிஞ்சிக்க முடையலப்பா’ எனக் கூறும் மகனிடம், அவன் அப்பா கேட்கிறார்: ‘எதுவுமே நிரப்பாத மண்பானைக்குள்ள என்னப்பா இருக்குது?’. ‘ஒண்ணுமேயில்ல’ நு மகன் சொன்னதும் அப்பா சிரிச்சிட்டே, “அதுல ஆகாசம் இருக்குது. வெளி இருக்குது. பானை உடஞ்சு போனா அதுக்குள்ள இருக்கிற அந்த வெளி, வெட்ட வெளியோட கலந்திரும். ஆகாசம் ஆகாசத்தோட கலந்திரும்” அப்படினு சொல்லும்போது நான் ஸ்தம்பித்து நின்றேன். 

இந்த சிறுகதைத் தொகுப்பின் பலம் மொழி நடை- சொற்களின் தேர்வு, அதனைச் சரியாகப் பொருத்தியிருக்கும் பாங்கு, விவரணைகள், உணர்ச்சிகளை நேர்த்தியாகக் கடத்தியிருக்கும் அழகு, என மொழியிலே விளையாடி இருக்கிறார் எழுத்தாளர். இது அவருடைய முதல் தொகுப்பாம். திரு எஸ் ரா அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். மிக அருமையான இத்தொகுப்பை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இத்தனை நுணுக்கமாக எழுதிய திரு கணேஷ் பாபுவுக்கு என் நன்றியும், வாழ்த்தும். 

No comments:

Post a Comment