Monday, June 23, 2025

வழி செல்லும் (சொல்லும்) தடங்கள்

திண்டில் அமர்ந்து
வாசிப்பில் ஆழ்ந்திருந்த
என் கையில் கிச்சு கிச்சு முட்டியது ஒற்றைக் கருப்பு சிற்றெறும்பு
கசக்கித் தட்டிவிட்டேன்,
அனிச்சையாக!
குற்ற உணர்வுடன்
கவனித்தேன் கூர்மையாக:
கீழே விழுந்த அது
இறந்திருக்கவில்லை;
சற்றே ஆசுவாசம் எனக்கு.
சிறிது தடுமாறியது,
சுருக்கத்தில் இருந்து விரிந்தது,
ஒருக்களித்து நொண்டியது,
மெல்ல இருபக்கக் கால்களைப் பாவித்தது,
மெல்ல மெல்ல ஊர்ந்தது;
சில நொடிகளில்,
திண்டைச் சுற்றி வந்தது
தன் குழுவை விட்டுத் 
தவறிய 
ஒற்றைச் சிற்றெறும்பு
தன் பிறவி பயனை அடைந்து
குழுவிடம் திரும்பியது:
தவறுதலும் வீழ்தலும்
வழி செல்லும் தடங்கள்,
முற்றுப்புள்ளிகள் அல்ல!

No comments:

Post a Comment