தம்பி வெற்றிச்செல்வன் இராசேந்திரன் எழுதிய ‘கீதாரியின் உப்புக்கண்டம்’ புத்தகம் வெள்ளியன்று தம்பியிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். மேய்ச்சல் பகுதி மக்களின் காதல், வலசை, குடும்பம், என அவர்களின் பெருவாழ்வு பற்றிய கவிதைத் தொகுப்பு. 58 கவிதைகள் கொண்டது. அது என்ன 58?! நிச்சயம் தம்பி அதற்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பார்.
தளுகையே அருமை! இப்படி ஒரு முதல் பக்கத் தளுகையைப் பார்த்துவிட்டு, பக்கங்களை எப்படி திருப்பாமல் இருக்க முடியும்?
“கோடைக்கால கரிசல் நிலமாக வெடித்திருக்கும் கால்களைக் கொண்டு (அடடா!)
தமிழகத்தின் நிலமெங்கும் அலைகுடிகளாக அலைந்து திரிந்து நிலத்தை வளமாக்கும் நிகழ்கால கிடைமாடு, கிடையாட்டுக் கீதாரிகளுக்கும், கீதாரி வீட்டுப் பெண்களுக்கும்…”
அழகு. மிகவும் பொருள் பொதிந்தக் கவிதை நயம்! நான் இந்த வரிகளை மட்டும் 5 முறையேனும் வாசித்திருப்பேன்.
பல கவிதைகளில் தாய் தந்தையருக்கு நடுவே இருக்கும் கவித்துவமானக் காதலை மெல்லிய இசையைப் போல, குளிர்க்காற்றைப் போல, தூவானம் போல மிக வருடலாகக் கவிந்திருக்கிறார். முதல் கவிதையே அப்பாவின் சிலிர்ப்பு தான். அம்மா புகைமூட்டி, வெந்நீர் வைக்கும் காட்சியைக் கவிதையாகவே காட்சிப்படுத்துகிறார்:
‘மாயக்கண்ணன் இசைத்திடாத
புதுவகை இசையோடு
நெருப்புக்கு உயிரூட்டப்
போராடிக்கொண்டிருப்பாள் அம்மா.
இதையெல்லாம் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி
அம்மாவின் ஊதுகுழாய் இசையை
இரசித்துக் கொண்டிருப்பார் அப்பா.’
இப்படி அம்மாவின் இசையை அப்பா இரசிக்க, பிள்ளைகள் பெற்றோரின் காதலைக் கவிதையாக்குதல் ஒரு கொடுப்பினை - இரு தலைமுறையினருக்கும்! இந்த கொடுப்பினையை சிறிது வானில் மின்னும் வெள்ளியும், காடும் பகிர்கிறது:
‘இத்தனைக் கோடி வெள்ளியில்
எத்தனை நம் காதலைக் கண்டு
பொறாமைப்பட்டிருக்கும்.’
‘மூங்கிக்கம்பிற்குத் தாலி கட்டிக்கொண்டவளிடம்
பெரிதாய் என்ன எதிர்பார்க்கமுடியும்…?
நத்தை கூட்டைத் தூக்கிச் சுமப்பது போல
பனை ஓலைக் கூட்டை
தூக்கிக்கொண்டு நிலமெல்லாம்
பச்சை தேடி அலையும்போது
தன் பச்சை இதுதான்
தன் காடு இதுதான்
என்றுணர்ந்து
இடையன் பின்னே திரியும்
பெருங்காதலைத் தவிர…!’
இதற்கு வெற்றிச் செல்வன் ஒரு கதை சொன்னார். ஆண் வலசை சென்றிருக்கும்போது வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்தால், ஆண்மகனைப் பார்க்காமலேயே மூங்கிக்கம்பிற்கு வாக்கப்பட்டுவிடுவார்களாம், கீதாரி வீட்டுப் பெண்கள்!
கீதாரி காதலின் உச்சம் மழைவெயில் கவிதை: கார்கால அடைமழைக்கு ஆடுகள் நனைய, அப்பாவும் நனைகிறார். அம்மாவும் வலசையில் அமர்ந்தபடி நனைகிறார். கோடையின் அதிக வெயிலில், ‘இந்தாளு தலையில் துண்டே போடமாட்டாரே’ என அவரின் தலைசூட்டை நெஞ்சுக்குள் இறக்கிக்கொள்கிறாளாம அம்மா. உடனே அக்னி சூடு அம்மாவை சுட்டுவிடும் என்று துண்டைத் தலையில் போட்டுக் கொள்கிறாராம் அப்பா! சிறு தொடுதலற்ற, கண் நோக்கல் கூட அற்ற அக்கறையான வார்த்தைகளே அற்ற உரையாடல்- இதைவிட இந்த தலைமுறைக்குக் காதலை எப்படி சொல்லிவிட முடியும்?
ஆடுகளோடு பிணைந்திருக்கும் வாழ்வை யாவரும் புரிந்துகொள்ளும்படி வரிந்திருக்கின்றன பல கவிதைகள்: முப்பாட்டன்கள் ஆடுகளை மேய்க்க, ஆடுகள் பிரபஞ்சத்தை மேய்த்துக் கொண்டிருந்தனவாம்! கீதாரி மானம் கவிதையில், ‘எத்தனை அறைகள் வாங்கியபின்னும் இன்னும் இந்த ஆடுகளூடவே வாழ்கிறார்’ என்ற கவிதையைப் படிக்கும்போது, ஆடுகளைக் கீதாரியின குழந்தைகளாகவே பார்க்கிறேன். ஏனெனில், எத்தனை அவமானங்கள் வந்தாலும், பிள்ளைகளிடம் மட்டும் தானே
நிபந்தனையற்ற அன்பைப் பகிரமுடியும்? அதையே நினைவாடுகள் கவிதையிலும் காண்கிறேன்: ஆடுகளை விற்றுப் புஞ்சை நிலம் வாங்கிய அப்பா, ஆடுகளின் நினைவைத் தான் புஞ்சை நிலத்தில் மேயவிட்டிருக்கிறாராம்!
வாழ்வைப் பற்றி பேசிவிட்டு, தாத்தனும், அப்பத்தாவும் இல்லாமல் எப்படி? நீதிகளற்ற, எல்லையில்லாத கதை சொல்லும் பாட்டியைப் பாம்படத்துடன் உருவகப்படுத்திக் கொண்டேன்!
போகிறபோக்கில், அரசியலும் தவறவில்லை இந்த தொகுப்பில், மனிதனின் பேராசை அரக்கனும் சாடப்பட்டிருக்கிறான்!
நிறைவான தொகுப்பு. நான் சிறு வயது முதல் ஆடு, மாடுகளோடு வாழ்ந்திருந்தாலும் (எனக்கு மிகவும் விருப்பமான மாட்டை நான் விடுதியில் இருந்தபோது விற்றுவிட்டதால், பால் குடிக்காமல் 15 ஆண்டுகள் ஒத்துழையாமை போராட்டம் செய்திருக்கிறேன்), இத்தனை நெருக்கமான ஒரு வாழ்வு இப்போது தான் புரிந்துகொண்டேன்! தம்பிக்கு நன்றியும், வாழ்த்துகளும்!
No comments:
Post a Comment